சென்ற தலைமுறை முன் இருந்த மிகப் பெரிய கேள்வி “அனைவருக்கும் போதுமான உணவை எவ்வாறு உற்பத்தி செய்வது?”
பசுமைப் புரட்சியின் மூலம் அந்தக் கேள்விக்கு இந்தியா பெருமளவில் பதில் கண்டது.
அதனால்தான், சென்ற வாரம் உலக உணவுப் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, ஐசிஏஆர் – மத்திய கிழங்கு பயிர் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ICAR-CTCRI) இயக்குநர், “இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துவிட்டது” என்று கூறிய செய்தி என் கவனத்தை ஈர்த்தது.
அது இந்திய விவசாயத்தின் ஒரு வரலாற்றுச் சாதனை.
கடந்த 12 ஆண்டில் 2014-15 இல் 265 மில்லியன் டன்களாக இருந்த இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி, 2025-26 இல் 376.5 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது.
இந்த உயர்வில் பெரும்பங்கு வகித்தவை அரிசி, கோதுமை மற்றும் மக்காச்சோளம்.
1950-51 ஆம் ஆண்டில் 20.6 மில்லியன் டன்களில் இருந்த அரிசி உற்பத்தி இப்பொழுது 150 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது.
மக்காச்சோள உற்பத்தி 1.7 மில்லியன் டன்களில் இருந்து சுமார் 45 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது.
ஆனால் இதே காலகட்டத்தில் ஒரு வேறு கதை அமைதியாக நடந்துள்ளது.
1950-51 ஆம் ஆண்டில் இந்தியா சுமார் 23 மில்லியன் டன் பாரம்பரிய உணவு சிறுதானியங்களை உற்பத்தி செய்தது. இன்று 75 ஆண்டுகளுக்குப் பிறகும், சிறுதானிய உற்பத்தி வெறும் 18 முதல் 20 மில்லியன் டன் அளவிலேயே உள்ளது.
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இந்தியா உணவுத் தன்னிறைவை அடைந்தது.
ஆனால் அந்தப் பயணத்தில் காலநிலை மாற்றத்தைத் தாங்கும் திறன் கொண்ட ஒரு பெரிய உணவு அமைப்பை இழந்து விட்டது.
இன்றைய நுகர்வோர் விருப்பமும் அரிசி, கோதுமை சார்ந்த உணவுகளுக்கும், இறைச்சி நோக்கியே செல்கின்றது.
அரசு கொள்முதல் கொள்கைகளும் அரிசி மற்றும் கோதுமையை மட்டுமே மையமாகக் கொண்டிருந்தன.
இதனால், நேரடியாக மனிதர்கள் உணவாக உண்ணும் சிறுதானியங்களின் இடத்தை, பெருமளவில் கால்நடை தீவனம் மற்றும் தொழில்துறை பயன்பாட்டிற்கான மக்காச்சோளம் பிடித்துக் கொண்டது.
தமிழ்நாட்டின் குதிரைவாலி ( Barnayard Millet / Echinochloa frumentacea ) இந்த மாற்றத்தின் ஒரு அடையாளமாக உள்ளது.
70 முதல் 90 நாட்களில் அறுவடைக்கு வரும் இந்த சிறுதானியம், குறைந்த மழை, அதிக வெப்பநிலை மற்றும் வறட்சி சூழல்களிலும் நன்கு விளையும் திறன் கொண்டது.
ஒரு கிலோ அரிசி உற்பத்திக்கு 3,000 முதல் 5,000 லிட்டர் நீர் தேவைப்படும் நிலையில், குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் அதில் ஒரு சிறிய பகுதி நீரிலேயே விளைகின்றன.
இவ்வளவு காலநிலைத் தாங்கும் திறன் கொண்ட பயிராக இருந்தும், தமிழ்நாட்டில் குதிரைவாலி சாகுபடி செய்யப்படும் பரப்பு இன்று சுமார் 4,500 ஹெக்டேர் மட்டுமே.
காலநிலை மாற்றம் விவசாயத்தின் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ள இந்த நேரத்தில், கால நிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் எதிர்காலத்திற்குப் பொருத்தமான பயிர்கள் பின்தள்ளப்பட்டிருப்பது சிந்திக்க வேண்டிய விஷயம்.
இதே நிலைதான் மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு போன்ற உணவுக் கிழங்கு வகைகளுக்கும்.
குறைந்த நீரில் அதிக உணவு உற்பத்தி செய்யும் திறன், காலநிலை அதிர்வுகளைத் தாங்கும் ஆற்றல் மற்றும் உயர்ந்த ஊட்டச்சத்து மதிப்பு இருந்தும், அவை இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு விவாதங்களில் ஓரங்கட்டப்பட்டுள்ளன.
இன்று இந்திய விவசாய ஆராய்ச்சி ஒரு புதிய சந்திப்புப் புள்ளியில் நிற்கிறது.
அன்று டாக்டர் சுவாமிநாதன் தலைமுறையின் முன் இருந்த கேள்வி:
“அனைவருக்கும் போதுமான உணவை எவ்வாறு உற்பத்தி செய்வது?”
இன்றைய புதிய தலைமுறை எதிர்கொள்ளும் கேள்வி:
“காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டபடியே போதுமான உணவை எவ்வாறு உற்பத்தி செய்வது?”
ஆனால் இதற்கான பதில் ஆராய்ச்சி நிலையங்களில் மட்டும் இல்லை.
அது நுகர்வோரின் தட்டிலும் உள்ளது. அந்த நுகர்வோரில் பெரும்பாலும் புதிய தலைமுறையே உள்ளது.
இன்று ஒரு நுகர்வோர் என்ன சாப்பிடுகிறார் என்பது நாளை ஒரு விவசாயி என்ன பயிரிடுவார் என்பதை தீர்மானிக்கிறது.
குதிரைவாலி, சாமை, தினை, வரகு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்களையும், மரவள்ளி, சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளையும் நாம் தேர்வு செய்யும் ஒவ்வொரு முறையும், காலநிலை மாற்றத்தைத் தாங்கும் விவசாய முறைக்கு ஆதரவளிக்கிறோம்.
பசுமைப் புரட்சி இந்தியா பசியை வென்றது.
அடுத்த புரட்சி காலநிலை அபாயத்தை வெல்ல வேண்டும்.
அது வயலில் தொடங்காது.
அது புதிய தலைமுறையின் உணவு தட்டில் தொடங்கும்.
ஸ்மார்ட் தலைமுறைக்கு, ஸ்மார்ட் உணவுத் தேர்வு அவசியம்.
#Smartfood #Barnyardmillet #Kudiraivali #Echinochloa